தமிழ் இலக்கணம்: வேற்றுமை - 8 வகைகளும் உருபுகளும் விரிவான விளக்கமும்

 

வேற்றுமை  

வேற்றுமை என்றால் என்ன?

  • வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையாகும்.

  • இது ஒரு சொற்றொடரில் உள்ள பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையே உள்ள இலக்கண உறவுகளை வேறுபடுத்திக் காட்டுவதாகும்.

  • பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வனவே 'வேற்றுமை' எனப்படும்.  

வேற்றுமை உருபுகள்

  • பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளே வேற்றுமை உருபுகள் எனப்படும்.

உதாரணமாக: 'இராமன் அழைத்தான்' என்பதில் 'இராமன்' என்பது எழுவாய். ஆனால், 'இராமனை அழைத்தான்' என்பதில் 'இராமனை' என்பது செயப்படுபொருளாக மாறுகிறது. இதற்கு உருபு துணை நிற்கிறது.

வேற்றுமையின் வகைகள்:

வேற்றுமை  எட்டு வகைப்படும்

  1. முதல் வேற்றுமை

  2. இரண்டாம் வேற்றுமை 

  3. மூன்றாம் வேற்றுமை

  4. நான்காம் வேற்றுமை 

  5. ஐந்தாம் வேற்றுமை

  6. ஆறாம் வேற்றுமை 

  7. ஏழாம் வேற்றுமை

  8. எட்டாம் வேற்றுமை

  
வேற்றுமைகளின் விரிவான விளக்கம்:

1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)
 

விளக்கம்: எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.            

உருபு: இல்லை.

எ.கா.: பாவை வந்தான்.

2. இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை)

விளக்கம்: ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச்  செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.

உருபு: .

பொருள்கள்: ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்.

ஆக்கல்
  
 கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
 
அழித்தல் 
 
பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
 
அடைதல்
  
 கோவலன் மதுரையை அடைந்தான்
 
நீத்தல்
 
காமராசர் பதவியைத் துறந்தார்
 
ஒத்தல்
  
 தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
 
உடைமை
 
வள்ளுவர் பெரும் புகழை உடையவர்


3. மூன்றாம் வேற்றுமை (கருவி வேற்றுமை)
 

ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள்.

 
இதில் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
 
கருவிப் பொருள்
 
முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.
 
முதற்கருவி – கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது – மரத்தால் சிலை செய்தான்.
 
துணைக்கருவி – ஒன்றைச் செய்வதற்கு துணையாக இருப்பது – உளியால் சிலை செய்தான்.
 
கருத்தாப்பொருள்
 
ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.
 
ஏவுதல் கருத்தா
 
பிறரை செய்ய வைப்பது
 
எ.கா – கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
 
இயற்றுதல் கருத்தா
 
தானே செய்வது
 
எ.கா  சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது
 
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
 
எ.கா.  புறந்தூய்மை நீரான் அமையும்
 
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
 
எ.கா.  தாயொடு குழந்தை சென்றது.
  
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.


4. நான்காம் வேற்றுமை (கொடை வேற்றுமை)


 உருபு: கு.
 

பொருள்கள்: கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.

கொடை
  
 முல்லைக்குத் தேர் கொடுத்தான்
 
பகை
  
புகை மனிதனுக்குப் பகை
 
நட்பு
  
 கபிலருக்கு நண்பர் பரணர்
 
தகுதி
  
 கவிதைக்கு அழகு கற்பனை
 
அதுவாதல்
  
தயிருக்குப் பால் வாங்கினான்
 
பொருட்டு
  
தமிழ்வளர்ச்சிக்கு பாடுபட்டார்
 
முறை
  
செங்குட்டுவனுக்கு தம்பி இளங்கோ
 
எல்லை
  
தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்
 
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.  
 
எ.கா – கூலிக்காக வேலை


5. ஐந்தாம் வேற்றுமை (நீங்கல் வேற்றுமை)

உருபுகள்: இன், இல்.

பொருள்கள்: நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய பொருள்களில் வரும்.

நீங்கல்
 
தலையின் இழிந்த மயிர்
 
ஒப்பு
 
பாம்பின் நிறம் ஒரு குட்டி
 
எல்லை
 
தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
 
ஏது 
 
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்

  

6. ஆறாம் வேற்றுமை (உடமை/கிழமை வேற்றுமை)

உருபுகள்: அது, ஆது, அ.

பொருள்: இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.

எ.கா.: இராமனது வில், நண்பனது கை.

ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை


7. ஏழாம் வேற்றுமை (இட வேற்றுமை)

உருபுகள்: கண், மேல், கீழ், கால், இல், இடம்.

பொருள்: இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

 எ.கா. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது, 

இரவின்கண் மழை பெய்தது.

8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

விளக்கம்: விளிப்பொருளில் வரும் படர்க்கை பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதே விளி வேற்றுமை எனப்படும்.

 உருபு: இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.

மாற்றம்: பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு (எ.கா: அண்ணன் என்பதை அண்ணா என்றும், புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது).
 

 

_____________________________________________________________________________________

வேற்றுமை இலக்கணம் குறித்த இந்த விரிவான தொகுப்பு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ் இலக்கணம் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் ஏதேனும் இருந்தால், கருத்துப் பெட்டியில் (Comment Box) தெரியப்படுத்துங்கள்.

தொடர்ந்து தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றுவோம்!

நன்றி!

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்