ஆத்திசூடி: அன்றாட வாழ்வுக்கு ஒளவையின் 109 அருமருந்துகள்!


ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

        ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


பொருள்: திருவாத்திப் பூமாலையைச் சூடிய சிவபெருமானை (தேவனை) வாழ்த்தி வணங்குவோம். (இங்குள்ள 'தேவன்' என்பது விநாயகக் கடவுளைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். அவர் அமர்ந்த நிலையில் உள்ளவர்.)

ஆத்தி-திருவாத்தி பூமாலையை  

சூடி-அணிபவராகிய சிவபெருமான் 

அமர்ந்த-விரும்பிய   

தேவனை-விநாயகக் கடவுளை  

ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி  

தொழுவோம்-வணங்குவோம்  

யாமே-நாமே.


ஆத்திசூடி: அறன் வலியுறுத்தும் கட்டளைகள் (1-109)

  1. அறம் செய விரும்ப: நீ தருமத்தை (கடமையை) செய்ய ஆவல் கொள். 
  2. ஆறுவது சினம்: கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
  3. இயல்வது கரவேல்: உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு  ஒளிக்காது கொடு. 
  4. ஈவது விலக்கேல்: ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.
  5. உடையது விளம்பேல்: உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
  6. ஊக்கமது கைவிடேல்: எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
  7. எண் எழுத்து இகழேல்: கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
  8. ஏற்பது இகழ்ச்சி: இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
  9. ஐயம் இட்டு உண்: யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
  10. ஒப்புரவு ஒழுக: உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
  11. ஓதுவது ஒழியேல்: நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
  12. ஔவியம் பேசேல்: ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
  13. அஃகஞ் சுருக்கேல்: அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
  14. கண்டொன்று சொல்லேல்: கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
  15. ஙப் போல் வளை:  'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
  16. சனி நீராடு: சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
  17. ஞயம்பட உரை: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
  18. இடம்பட வீடு எடேல்:    உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
  19. இணக்கம் அறிந்து இணங்கு:    ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
  20. தந்தை தாய்ப் பேண்: உன் தந்தையையும், தாயையும் அவர்களுடை முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
  21. நன்றி மறவேல்: ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
  22. பருவத்தே பயிர் செய்:  எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
  23. மண் பறித்து உண்ணேல்: பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்).
  24. இயல்பு அலாதன செய்யேல்: நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
  25. அரவம் ஆட்டேல்: பாம்புகளை பிடித்து விளையாடாதே.
  26. இலவம் பஞ்சில் துயில்: இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
  27. வஞ்சகம் பேசேல்: படச்(உண்மைக்கு புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.
  28. அழகு அலாதன செய்யேல்: இழிவான செயல்களை செய்யாதே.
  29. இளமையில் கல்: இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
  30. அறனை மறவேல்: தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.
  31. அனந்தல் ஆடேல்: மிகுதியாக துங்காதே.
  32. கடிவது மற: யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
  33. காப்பது விரதம்: தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
  34. கிழமை பட வாழ்: உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
  35. கீழ்மை யகற்று: இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
  36. குணமது கைவிடேல்: நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே (கைவிடேல்).
  37. கூடிப் பிரியேல்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.
  38. கெடுப்ப தொழி: பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
  39. கேள்வி முயல்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
  40. கைவினை கரவேல்: உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
  41. கொள்ளை விரும்பேல்: பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
  42. கோதாட் டொழி: குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
  43. கௌவை அகற்று: வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
  44. சக்கர நெறி நில்: அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் ).
  45. சான்றோ ரினத்திரு: அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
  46. சித்திரம் பேசெல்: பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.
  47. சீர்மை மறவேல்: புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
  48. சுளிக்கச் சொல்லேல்:  கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.
  49. சூது விரும்பேல்: ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
  50. செய்வன திருந்தச் செய்: செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
  51. சேரிடமறிந்து சேர்: நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
  52. சையெனத் திரியேல்: பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.
  53. சொற்சோர்வு படேல்: பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
  54. சோம்பித் திரியேல்: முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
  55. தக்கோ னெனத்திரி: பெரியோர்கள் உன்னைத் தக்கவன் (யோக்கியன், நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.
  56. தானமது விரும்பு: யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
  57. திருமாலுக்கு அடிமை செய்: நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.
  58. தீவினை யகற்று: பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
  59. துன்பத்திற் கிடங்கொடேல்: முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
  60. தூக்கி வினைசெய்: ஒரு வேளையை முடிப்பதற்க்கான வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கவும்.
  61. தெய்வ மிகழேல்: கடவுளை பழிக்காதே.
  62. தேசத்தோ டொத்துவாழ்: உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.
  63. தையல்சொல் கேளேல்: மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
  64. தொன்மை மறவேல்: பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
  65. தோற்பன தொடரேல்: ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
  66. நன்மை கடைப்பிடி: நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
  67. நாடொப் பனசெய்: நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
  68. நிலையிற் பிரியேல்: உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
  69. நீர்விளை யாடேல்: வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.
  70. நுண்மை நுகரேல்: நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
  71. நூல்பல கல்: அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
  72. நெற்பயிர் விளை: நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
  73. நேர்பட வொழுக: ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
  74. நைவினை நணுகேல்: பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
  75. நொய்ய வுரையேல்: பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
  76. நோய்க்கிடங் கொடேல்: மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
  77. பழிப்பன பகரேல்: பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய், கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
  78. பாம்பொடு பழகேல்: பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
  79. பிழைபடச் சொல்லேல்: குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
  80. பீடு பெறநில்: பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.
  81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்: உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
  82. பூமி திருத்தியுண்: விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் (அ) விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
  83. பெரியாரைத் துணைக்கொள்: அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
  84. பேதைமை யகற்று: அறியாமையை போக்க.
  85. பையலோ டிணங்கேல்: அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
  86. பொருடனைப் போற்றிவாழ்: பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
  87. போர்த்தொழில் புரியேல்: யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.
  88. மனந்தடு மாறேல்: எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
  89. மாற்றானுக் கிடங்கொடேல்: பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
  90. மிகைபடச் சொல்லேல்: சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
  91. மீதூண் விரும்பேல்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
  92. முனைமுகத்து நில்லேல்: எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
  93. மூர்க்கரோ டிணங்கேல்: மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
  94. மெல்லினல்லாள் தோள்சேர்: பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
  95. மேன்மக்கள் சொற்கேள்: நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
  96. மைவிழியார் மனையகல்: விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
  97. மொழிவ தறமொழி: சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.
  98. மோகத்தை முனி: நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
  99. வல்லமை பேசேல்: உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
  100. வாதுமுற் கூறேல்: பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.
  101. வித்தை விரும்பு: கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
  102. வீடு பெறநில்: முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.
  103. உத்தமனாய் இரு: உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
  104. ஊருடன் கூடிவாழ்: ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
  105. வெட்டெனப் பேசேல்: யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
  106. வேண்டி வினைசெயேல்: வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
  107. வைகறை துயிலெழு: நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
  108. ஒன்னாரைத் தேறேல்: பகைவர்களை நம்பாதே.
  109. ஓரஞ் சொல்லேல்: எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

 

உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! (Share Your Thoughts!)

ஆத்திசூடியின் 109 அறக்கருத்துகளைப் படித்துப் பார்த்த பிறகு, உங்களுக்குள் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • இந்த 109 வரிகளில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் உணரும் முக்கியக் கட்டளை (எ.கா. "ஊக்கமது கைவிடேல்") எது?

  • "ஞயம்பட உரை" அல்லது "அஃகஞ் சுருக்கேல்" போன்ற ஆத்திசூடிக் கருத்துக்கள் இன்றும் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • இளைய தலைமுறையினர் கட்டாயம் கற்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கும் ஒரு ஆத்திசூடி வரியை மட்டும் குறிப்பிட முடியுமா?

💬 உங்கள் கருத்துகளை Comment-ல் பதிவு செய்து, இந்த அரிய நூலைப் பற்றிய விவாதத்தைத் தொடர உதவுங்கள்!

👍 படித்தது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்