அணி இலக்கணம் - அழகும், அர்த்தமும்!

 

 

_________________________________________ 

அணி இலக்கணம் 

எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம். அதுபோல், கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.
 
அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
 
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
 
"மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்". 
 
 
இயல்பு நவிற்சி அணி:  
 
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
 
சான்று:
 
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
             துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
             அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
             நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
 
                                                                 - கவிமணி தேசிக விநாயகனார்
 
இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும். 
 
  
உயர்வு நவிற்சி அணி:
 
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
 
சான்று
 
குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா
 
என்று ஒரு தாய் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
 
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
 
உவமை அணி:
 
மயில் போல ஆடினாள்
 
மீன் போன்ற கண்
 
இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.
 
இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர்.
 
உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                 (பொறையுடைமை)
 
பொருள்: பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
 
இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
 
நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்).
 
போல என்பது உவம உருபு.
 
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
 
 
போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.
 

எடுத்துக்காட்டு உவமை அணி:
  
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.                  (கல்வி)
 
பொருள்: மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
 
இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.
 
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.
 
இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
 
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால், அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
 
 
இல்பொருள் உவமையணி:
 
மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
  
காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
 
இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போலஎன்னும் உவமைகள் வந்துள்ளன.
  • உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை.
  • கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.
இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.
 
 
உருவக அணி:
  
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம்.
 
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
 
இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
 
‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது உவமை ஆகும்.
 
தமிழாகிய தேன் என்னும் பொருளில் ‘தமிழ்த்தேன்’ என்று கூறுவது உருவகம் ஆகும்.
 
வெள்ளம் போன்ற இன்பத்தை ‘இன்ப வெள்ளம்’ என்று கூறுவதும், கடல் போன்ற துன்பத்தைத் ‘துன்பக்கடல்’ என்று கூறுவதும் உருவகம் ஆகும்.
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று.
 
இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
 
 
ஏகதேச உருவக அணி:
  
அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும். 
 
  • இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.
  • அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை.
 
இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
 
(ஏகதேசம் – ஒரு பகுதி)
  
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.    (திருக்குறள்)
 
விளக்கம்: வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை.
 
எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.
 
 
பிறிது மொழிதல் அணி:
 
மலையப்பன் சிறந்த உழைப்பாளி. ஆனால் தனது உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டான். அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். ஒருமுறை நோயுற்றிருந்த அவனைப் பார்க்கவந்த அவனது உறவினர் ஒருவர், தம்பி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்இதை நன்றாகப் புரிந்துகொள்” என்றார். மலையப்பன், “எனக்கும் இப்போதுதான் புரிகிறது. இனி நான் என் உடல்நலத்தில் போதிய அக்கறை செலுத்துவேன்”என்றான்.
 
இப்பகுதியைப் படித்துப் பாருங்கள்.
 
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நலமாக இருந்தால்தான் உழைக்க முடியும்”என்று சொல்லவந்த உறவினர் உவமையை மட்டுமே கூறினார்.
 
அவர் சொல்லவந்த கருத்தை மலையப்பன் தானாகப் புரிந்துகொண்டான்.
 
இவ்வாறு உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
  
சான்று
 
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
 
இத்திருக்குறள், ”நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது.
 
இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்;
 
தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
 
எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.
 
 
வேற்றுமை அணி:
 
தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை.
 
அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்;
 
வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.
 
இப்பகுதியைக் கவனியுங்கள். வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை. ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை.
 
இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
 
சான்று
  
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
  
இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும் தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.
 
 
இரட்டுறமொழிதல் அணி:
  
காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். "எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துநர் கேட்டார். அதேநேரம் அருகிலிருந்தவர், ”உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார்.
 
அவன், “செங்கல்பட்டு” என்று கூறினான்.
 
அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது. அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துநர் புரிந்துகொண்டார். அவன் காலில் செங்கல்பட்டதால் காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்துகொண்டார்.
 
இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும்.
 
இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.
 
சான்று
  
ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு.
 
இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
 
தேங்காயில் ஓடு இருக்கும்;
 
தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்;
 
தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
 
நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்;
 
சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்;
 
அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்;
 
குரைப்பதற்கு வெட்கப்படாது.
 
இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால்,
 
இது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.
 
 
உவமைஅணி:
 
அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
 
மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
 
பாதம் - பொருள் (உவமேயம்)
  
மலர் - உவமை  
  
போன்ற - உவம உருபு
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
 
இதில் உவமையணி அமைந்துள்ளது.
 
 
உருவக அணி:
 
கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
 
உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே உருவகம்எனக் கூறப்படும்.
 
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
 
 சான்று
  
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.
 
இப்பாடலில், இன்சொல் – நிலமாகவும், வன்சொல் – களையாகவும், வாய்மை – எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் - கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
பின்வருநிலை அணிகள்:
 
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே 'பின்வருநிலை அணியாகும்.
 
இது மூன்று வகைப்படும்.
  1. சொல் பின்வருநிலையணி
  2. பொருள் பின்வருநிலையணி 
  3. சொற்பொருள் பின்வருநிலையணி  
 
1. சொல் பின்வருநிலையணி 
 
முன் வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல்பின்வருநிலை அணியாகும்.
 
சான்று  
  
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
 
இக்குறளில் ’துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
 
துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
 
 
2. பொருள் பின்வருநிலையணி
 
செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள்பின் வருநிலையணி ஆகும்.
 
சான்று
  
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.
 
இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.
 
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
 
இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
 
3. சொற்பொருள் பின்வருநிலையணி
 
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
 
சான்று
  
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
 
இக்குறட்பாவில் ’விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
 
 
வஞ்சப் புகழ்ச்சியணி:
 
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதுமாகும்.
 
சான்று 
  
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
 
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
 
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே .
 
பொருள்: புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது. இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.
 
 
தற்குறிப்பேற்ற அணி:
 
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
  
சான்று
  
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’
  
பொருள்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.
 
அணிப்பொருத்தம்: கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன.
 ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.
 
இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
 
 
தீவக அணி:
 
தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள்.
 
ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல,
செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.
 
தீவகம் மூன்று வகையாக வரும்.
  1. முதல்நிலைத் தீவகம்
  2. இடைநிலைத் தீவகம்
  3. கடைநிலைத் தீவகம் 
சான்று
  
சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து.
 
(சேந்தன-சிவந்தன; தெவ்-பகைமை; சிலை-வில்; மிசை-மேலே; புள்-பறவை;)
 
பொருள்: அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.
 
அணிப் பொருத்தம்
 
வேந்தன் கண் சேந்தன
தெவ்வேந்தர் தோள் சேந்தன
குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
அம்பும் சேந்தன
புள் குலம் வீழ்ந்து
மிசைஅனைத்தும் சேந்தன.
 
இவ்வாறாக முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.
 
அதனால் இது தீவக அணி ஆயிற்று. 
 
 
நிரல்நிறை அணி:
 
நிரல் = வரிசை
நிறை = நிறுத்துதல்
 
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
 
சான்று
  
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள் : 45
  
பொருள்: இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
 
அணிப்பொருத்தம்
 
இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.
 
 
தன்மையணி:
 
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும்.
.
இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
 
இவ்வணி நான்கு வகைப்படும்.
 
1. பொருள் தன்மையணி
 
2. குணத் தன்மையணி
 
3. சாதித் தன்மையணி
 
4. தொழிற் தன்மையணி என்பனவாகும்.
 
 
சான்று
  
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
 
சிலம்பு - வழக்குரை காதை வெண்பா
 
பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான்.
 
அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான். அணிப்பொருத்தம் கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.
 
“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்“ - தண்டியலங்காரம்: 27.
 
 

உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! (Share Your Thoughts!)

அணி இலக்கணம் பற்றி நாம் விரிவாகப் பார்த்த இந்த இடுகை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? இலக்கணத்தின் இந்த சுவையான பகுதியைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்கள் கட்டுரையை மேலும் வளப்படுத்தலாம்.

கீழே உள்ள கேள்விகளுக்கு நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்:

  • அணிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த அணி எது? உவமை, உருவகம், அல்லது இரட்டுறமொழிதல்... இவற்றில் எது உங்களைக் கவர்ந்தது, ஏன்?

  • உங்களுக்குத் தெரிந்த, ஆனால் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத புதிய ஓர் அணி இலக்கணத்தின் பெயரையும் அதன் எளிய விளக்கத்தையும் இங்கே பகிர முடியுமா?

  • இன்று நாம் கற்ற இயல்பு நவிற்சி அணி மற்றும் உயர்வு நவிற்சி அணி போன்ற அணிகள், திரைப்படப் பாடல்கள் அல்லது தற்காலக் கவிதைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஓர் உதாரணத்துடன் கூற முடியுமா?

 

🔥 தொடர்ந்து இணைந்திருங்கள்! (Keep Connected!)

அணி இலக்கணம் பற்றிய இந்தப் பயணத்தில் நீங்கள் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். தமிழின் இனிமையை, இலக்கணத்தின் ஆழத்தை மேலும் பலருக்குக் கொண்டு செல்லும் எங்களுடைய 'தமிழ்க்கல்விச் சுடர்' குடும்பத்தில் நீங்களும் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

இலக்கியச் சுடரொளியை எங்கும் பரப்ப...

YouTube: அரிய தமிழ் இலக்கணப் பாடங்கள், சுவாரஸ்யமான தமிழ்க் கவிதைகள், மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கான காணொளி விளக்கங்களைப் பெற, எங்களுடைய 'தமிழ்க்கல்விச் சுடர்' YouTube சேனலை உடனே Subscribe செய்யுங்கள்! 

 Instagram / Threads: ஒவ்வொரு நாளும் ஒரு புதிய குறள், புதிய இலக்கணக் குறிப்பு, மற்றும் அழகிய தமிழ்ச் சொற்களைக் காண, எங்களை Instagram மற்றும் Threads-ல் Follow செய்யுங்கள்!

 Facebook / Twitter (X) தமிழுலகின் சமீபத்திய செய்திகள், தமிழ்ப் பண்டிதர்களின் பொன்மொழிகள் மற்றும் உடனடி தமிழ் சார்ந்த தகவல்களுக்கு, எங்களை Facebook மற்றும் Twitter-ல் பின்தொடருங்கள். 

 Blogger: அணி இலக்கணம் போன்ற விரிவான கட்டுரைகள் மற்றும் ஆழமான ஆய்வுக் குறிப்புகளைப் படிக்க, எங்களுடைய 'தமிழ்க்கல்விச் சுடர்' வலைப்பதிவுக்கு (Blogger) தொடர்ந்து வருகை தாருங்கள். 


💖 நீங்கள் இல்லையேல் தமிழ்க்கல்விச் சுடர் இல்லை!

உங்கள் ஆதரவு தான் எங்களுக்குப் பெரிய பலம். எங்கள் 'தமிழ்க்கல்விச் சுடர்' அனைத்து சமூக ஊடகக் கணக்குகளின் இணைப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம். கிளிக் செய்து எங்களைப் பின்தொடர்ந்து, தமிழுக்கான இந்தப் பணிக்கு உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்!






 

கருத்துரையிடுக

0 கருத்துகள்